About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Monday, November 14, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ----> *** குழந்தைளுக்கு.."தேங்க்கூம்" ***

கவிதை பிறந்த கதை:
************************
எல்லோருடைய வாழ்விலும்..குழந்தைப் பேறு என்பது ஒரு வரம்.நாம் அனைவருமே ஒரு காலத்தில் குழந்தைகளாய்..
இன்னொரு சமயத்தில் பெற்றோர்களாய்..

"படைத்தல்" இறைவனுக்கு மட்டுமே சாத்தியம் என்றால்..இங்கு ஒவ்வொரு பெற்றோரும் கடவுளே.
இன்று..நவம்பர்-14-2011.குழந்தைகள் தினமாகிய இந்நாளில்..பெற்றோர்களுக்கும்..குழந்தைகளுக்கும்
இந்தக் கவிதையின் வாயிலாக..நன்றி சொல்கிறேன்.


*** குழந்தைளுக்கு.."தேங்க்கூம்" ***
==============================
ஈரைந்து மாத தவத்திற்க்காய்..
இறைவன் கொடுத்த வரம்.


இலக்கணமில்லாத..
எழுத்துருவமில்லாத..
வரைமுறைகள்..வரம்புகள்..இல்லாத..
மொழி.....மழலை!


இப்போதைய குழந்தைகள்..
"இரண்டு கண்ண்ன்"களுக்கு..
பயப்படுவதில்லை என்பதால்..
என்னை வைத்து முயற்சித்தாள்
என் மனைவி..
"ஒழுங்கா சாப்பிடு...இல்லைன்னா..அப்பா வந்துடுவார்"
மழலையில்(ன்)..பதில்..
"அப்போ..அப்பா சாப்பிடட்டும்!".


தூங்காத குழந்தைக்காய்த்..
தாலாட்டுப் பாட..
"வேணாம்பா" என்று என்
வாய்மூடி..கைபேசியில்
பாட்டுக் கேட்கிறது!.


இன்னொரு நாளில்..
பாட்டி வடைசுட்ட கதைசொல்லி..
தூங்கச் செய்யும் முயற்சியின் முடிவாய்..
மீதிக் கதையைச் சொல்லி..
கண்ணம் தட்டுகிறது குழந்தை.
கண்ணயர்ந்து தூங்குகிறாள் மனைவி!.
"தாயுமானவனாய்" இரண்டரை வயது குழந்தை.


படபடக்கும் பட்டாம்பூச்சியை..
பயந்துகொண்டே..ரசிக்கும் குழந்தை.
எது அழகு..
பட்டாம்பூச்சியா..குழந்தையா..
முடிவெடுக்கத் திணறும்..
விசாரனணக் கமிஷனாய் நாங்கள்.


எங்களிருவரில்..யார் குரல்
உச்சரித்து ஒலித்தாலும்..
உடனே வந்து எங்களின் கைபற்றி
"என்னம்மா?" என்கிறது.
வாதியும்..பிரதிவாதியும்..சமாதானமாய்!
அன்பின் சாட்சியே..இங்கே..நீதிபதியாய்.


கைதட்டிப் பாரட்ட கற்றுக்கொடுத்தோம்
விளைவு-"ஏழாம் அறிவி"ன் டாங்லீக்கு
கைதட்டும் குழந்தை!.
உண்மைதான் இறைவனும்..குழந்தையும்
யாரிடத்திலும்..பேதம் பார்ப்பதில்லை.


ஆத்திரத்தில் அறிவிழந்து..
அடிக்கிறேன்..குழந்தையை..
அன்பு குறைந்த ஏமாற்ற்த்தால்..
அழுதபடியே சமாதானமாகும் குழந்தை.
நம்பிக்கைத் துரோகியாய் நான்.


ஒழுகும் மூக்குடன்
ஐஸ்கிரீமுக்கு அழும் குழந்தையிடம்
"காலியாயிடுச்சி" என்றேன்.
"காலி" என்று கைவிரித்துச்
சிரிக்கிறது.-உண்மைதான்..
மரணதண்டனைகும் மேலான..
மன்னிக்க முடியாத குற்றங்கள்..
குழந்தையிடம் சொல்லும் பொய்கள்.


எங்களை பயமுறுத்த நினைத்து
எதையோ செய்யும் குழந்தை
பயந்ததாய் நான்.
சாதித்தாய்ச் சிரிக்கும் குழந்தை.
சத்தியமாய்..நிலவில்
கால்பதித்த..அந்நொடியில்
ஆம்ஸ்ட்ராங் அடைந்த இன்பத்தைவிட
குழந்தையின் இன்பம் அதிகம் இந்நொடியில்.


இதையெழுதும் பொழுதுகூட..
பேனாவேண்டுமென்று கேட்டு அழும் குழந்தை
மழலைக்கு எழுத்துருவம் கொடுக்கும்..
குழந்தைக்கு... விட்டுக்கொடுதுப்..பின்
தொடரும் நான்.
நிச்சயமாய்..குழந்தையிடத்தில்..
தோற்கும்பொழுது எந்தப்
பெற்றோரும்..குறைந்து போவதில்லை..
ஏனெனில்..குழந்தை எங்களின் விழுது.


எத்தணையோ முயன்றும்..இன்னும்
மழலைப் பாடத்தில்..தேர்ச்சியடையவில்லை
நாங்கள்-விளைவு
"ச்சே!" என்று தலையிலடித்து
அலுத்துக் கொள்கிறது..குழந்தை
ஒரு ஆசானாய்!.


ஆங்கிலத்தில் "தேங்க்யூ" என்று
சொல்லிக் கொடுத்தோம்.
மழலையில் "தேங்க்கூம்" என்கிறது.
அப்படியே நாங்களும்-ஆதலால்
எங்கள் சார்பாய்..பெற்றோர்களுக்கும்
குழந்தைகளுக்கும் "தேங்க்கூம்!".


சில நேரத்தில் நாங்கள் பெற்றோராய்..
பல நேரத்தில் குழந்தையே.. பெற்றோராய்..
ஆசானாய்..கடவுளாய்..யாதுமானவனாய்!.


இன்னும்..நிறையய்..
இருக்கிறது..குழந்தையைப்
பற்றிச் சொல்ல...ஆனால்
ஒரு நவம்பர்-14 இல்லை..
14-நவம்பர் மாதங்களிருந்தாலும்..
காணாது..ஆகையால்..
வாழ்த்துக்கள்..மற்றும்.."தேங்க்கூம்"முடன்

   
         ---->"தந்தையுமானவனாய்" பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ----> ******* அவள்.. *******

கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தாயும்.

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தாயை நினைத்து எழுதியது.


******* அவள்.. **********

வேலை நிமித்தமாய்..
வேறுதேசம் சென்று
ஆண்டுகள் சில
ஆனபிறகு திரும்பிய நாளது..

என்னை எதிர்பாராது....
எதையோ எதிர்பார்த்துக்
காத்திருக்கும்...உறவுகள்...

"எப்பிடி இருந்தது வெளிநாடெல்லாம்?"
என்பதிலுக்குக் காத்திராமல்..
என்பெட்டியை ஊடுருவும்
மாமாவின் கண்கள்.......

"அங்கே தங்கம் விலையெல்லாம்
கம்மியாமே?!!" ...தன்கை
கண்ணாடி வளையலை தடவியபடி
தமக்கை....

"மொபைல் வாங்கினியாணா?"
கல்லூரிக் கனவுகளுடன் தம்பி...

"செட்டியாருக்கு இந்தமாசம்
வட்டி குடுக்கலை"
கேள்விக்குறியுடன் அப்பா.

எல்லோருக்கும் பின்னாலிருந்து
என்னை ஏக்கமாய்க்..
கலங்கிய கண்களுடன்
பார்த்துக் கொண்டே..
"சாப்பிட்டியாப்பா?...
சாதம் போடட்டுமா?" என்றவள்
அம்மா!.

 ---------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கணிப்பொறியுகத்தில் நான் ---->***** உண்ணாம...திண்ணாம ******

கவிதை பிறந்த கதை:
************************
   இனக்கவர்ச்சிகும்...நல்ல நட்பிற்க்கும்...காதலுக்கும்...வித்தியாசம் தெரியாமல் பெண்கள் சிறிது பேசிச் சிரித்தாலே..தவறாய்ப்
புரிந்துகொள்ளும் இளைஞர்களுக்கும்...அந்த இளைஞர்களை சரியாய் இனம்கண்டுகொண்டு தங்களுடைய தேவைகளைத் தீர்த்துக்
கொள்ளும் இளைநிகளுக்கும்... இந்தக் கவிதை சமர்ப்பணம்.........


******* உண்ணாம...திண்ணாம ***************

எல்லாமே நன்றாய்தானிருந்தது..
பணிநிமித்தமாய் பரிச்சியமென்றாலும்..
பார்த்த உடனே பிடித்துப்போனது.
எப்போது பேசினாலும்..
என்ன பேசினாலும்..
எதிர்ப்பே இல்லாமல்..
எதிர்பார்ப்பில்லாமல் பதிலளிப்பாள்.
நுனிநாக்கு ஆங்கிலம்...
எதிர்பாராமல் படும் விரல்களின்
ஸ்பரிசம்...
அவளுடன் அருந்தும்
தேநீர் கூடத் தேனாய்......
எல்லாமே நன்றாய்தானிருந்தது..

"புரட்டாசி சனிக்கிழமை..
பெருமாள் கோவில் போயிட்டு
வாப்பா" - அம்மாவின் வேண்டுகோள்.

"நாளைக்கி ஷாப்பிங் போனும்
வர்றீங்களா?"
"போலாமே"....
பெருமாளை பார்த்துக்கொள்ள..
ஆண்டாள் இருகிறாள்..
ஆனால்...அவளை...

"முதல்ல மாயாஜால் போலாம்"
மொழிபுரியாத படத்திற்க்கு
ஆனசெலவு ஜந்நுற்றைம்பது..
ஆனாலும் அவளுடன்
பார்தத முதல் படம்...
ஆறுதல் கொண்டேன்..

"சரியா பசிக்க்லை..
லைட்டா "சப்வே"ல சாப்பிடலாம்"
பர்கரும்..பீட்ஸாவும் என
வந்த பில் தொகை நானுறு...

"அண்ணாச்சிக் கடையில
எண்ணுறு பாக்கி"
அம்மாவின் குரல்...மனதிற்க்குள்.
மாதந்தோறும் வாங்கும்
மளிகைக்கே எண்ணுறுதானம்!!.
ஆனாலும் சாப்பிட்டது
அவள்...!
அதுவும் நன்றாய்தானிருந்தது..

"ஸ்பென்சர் போலாம்"
போனோம்.
பல கடைகள்....
பார்வையிலேயே தேடினாள்..
நிழலெனப் பின்னால் நான்..

"த்ர்ஸ்டியா இருக்கு"
குளிர்பானத்திற்க்குப் பின்
கோல்டு காபியும்..
இன்னொரு கையில் ஜஸ்கீரிமும்..
இதில் கரைந்து போனது நானும்..பணமும்..
ஆனாலும் நன்றாய்தானிருந்தது..

இறுதி முடிவெடுத்து பின்
வாங்கியதென்னவோ நகவெட்டிதான்..
அவள் நகத்துணுக்கில் விரைவில்
அழுக்குச் சேர
ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்..
ஏனெனில் வெட்டும்பொழுதெல்லாம்
என்நினைவு வரவேண்டுமல்லவா...

ஆக மொத்தம்
ஆயிரத்து எண்ணூறூ...
அவளுக்காக..பரவாயில்லை
அவளுக்காகத்தான்..எல்லாமே

"இரெண்டு மாச பாக்கி தம்பி"
கேள்விக்குறியுடன்
அண்ணாச்சி மனதில்...

எல்லாமே நன்றாய்த்தானிருந்தது..
அதுவரையில்..
கிளம்பும்பொழுது சொன்னாள்...
"போயிட்டு வர்றேங்கண்ணா"
இடியை என் இதயத்திலே
இறக்கிவிட்டு மின்னலென மறைந்தாள்..
அப்போது கூட
ஆட்டோவுக்கு நான்தான்...

அதுயெப்படியடி...........
மூச்சுக் காற்றுகள் உரசிக்கொள்ளும்
தூரத்திலெயமர்ந்து
மொழிதெரியாத படத்தை
பார்த்தபொழுது வராத..
பாசம்.....
பசியேயில்லாமல்...பகட்டுக்காக..
பர்கரும்..பீட்ஸாவுமாய்
புசித்தபோது வராத
பாசம்....

தெருமுனை வளையல்கடை
தவிர்த்து..நகவெட்டி வாங்க
ஸ்பென்சர் வரை
வந்தும்... வராத பாசம்..
எப்படியெடி தேவைகள்
தீர்ந்ததும்.ஊற்றெடுத்தது?!!!!!!!...

இதில் தவறு யார்மீது...

"குருடனுக்கு ஒரே மதி"
--- தவறு என் மீதா?

"காற்றூள்ள போதே
தூற்றிக்கொண்ட" அவள் மீதா?!!

"உண்ணாம..திண்ணாம...
அண்ணாமலைக்குப் பறிகொடுத்தானே
அரோகரா"  - அண்ணாச்சியின் புலம்பல்..

யார்மீது தவறு...இந்த
வயதின் மீதா.....அல்லது
வயது தந்த வாலிபத்தின் மீதா....
ஆதலால் இளைஞர்களே...
பகுத்தறிவோடிருங்கள்..
பக்குவப்படுங்கள்...
இறுதியாய் ஒன்று....
மனதைத் திறந்து வையுங்கள்..
மணிபர்ஸ்கள் மூடியே இருக்கட்டும்..........

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கணிப்பொறியுகத்தில் நான் ---->*** காத்திருக்கிறேன் அவருக்காக ****

கவிதை பிறந்த கதை:
************************
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இரண்டாம் கட்டம் என்று சொல்லப் படுவது வழக்கம்.
என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் உள்ளங்கைக் கதகதப்பில் இருந்துவிட்டு உலக வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்கும் தருணமே திருமணப் பருவம். அப்படிப் பட்ட தருணத்திற்க்காக என்னுடைய தோழி காத்திருந்த
நேரத்திலெ அவர் கேட்டுக் கொண்டதற்க்கிணங்க அவருக்காக நான் எழுதிய கவிதை இது. அவருடைய திருமண நாள் 04-Dec-2008.
       

*** காத்திருக்கிறேன் அவருக்காக ****
அலுவலகத்தின் அறிமுகவிழா..
அலுவலகத்தைப் பற்றி அறிந்த
அன்றே அவரைப் பற்றியும்
அறிந்து கொண்டேன்...
பிரகாசமான பெயர்
"பிரகாஷ்".

ஆகஸ்ட் பதினைந்து.....
பாரதத்திற்கு விடுதலை கிடைத்த
அந்நாளில் ..அவர் மனதிலே
சிறைபட்டுப் போனேன்....
சில நாட்கள் மின்னஞ்சல்..
வாயிலாகத் தொடர்ந்த நட்பு...
பின் புன்சிரிப்பும்...கைபேசியழைப்புமாய்...

என் தாயுமானவளே
எனக்குத் தோழியுமனவள்...
அவளிடத்திலே பகிர்ந்தபொழுது
அன்பொழுகச் சொன்னள்..
"யோசித்துப் பார்
தீர்க்கமான முடிவெடு
எடுத்தபின் திரும்பிப்பார்க்காதே
நம்பிக்கையிருந்தால் நம்பிக் கைபிடி..
அவனே உன் வழித்துணையாகவும்..
வாழ்க்கைத்துனையகவும் இருப்பான்"

எதிபாராதிருந்த ஒரு நாளில்
எதிர்பர்ர்த்திருந்த கேள்வி
அவரிடமிருந்தது.....
"நான் உன்னை நேசிப்பதாய்ச் சொன்னால்
என்ன உன் பதில்?"
ஒரு வரிக்கேள்வியானாலும்
விடை என் வாழ்வல்லவா....

தாயின் ஆலோசனையால்
தயாராய் இருந்தேன்...
முன்பே எடுக்கப் பட்ட
முடிவென்றாலும் சற்றே பதட்டம்தான்.
ஆனாலும் .அவர் முன்மொழிய ..
தாயிடத்திலே பேசுங்கள்" என்று
வழிமொழிந்தேன்.

அவரும் என் தாயும்
பேசிக்கொண்டிருந்த அந்த
தருனத்தில் என் இதயத்துடிப்பை
சிறிது தூரம்வரை இருந்த
எல்லோராலும் கேட்க முடிந்தது

அது பெண்பார்க்கும் படலம் இல்லை
சம்பிரதாயங்கள் இல்லை....
சாஸ்திரங்களும் குறுக்கே இல்லை..
பார்த்தபின்னே முடிவெடுக்கும் பழக்கமும்மில்லை
வீட்டிற்குப் போய்க்கடிதம் போடும்
விடையும் இல்லை.

முடிவாய்..தெளிவாய்..சொன்னார்.
"பிடித்திருக்கிறது..
நம்பிக்கொடுங்கள் ..ஒரு மகனாய்
நானிருப்பேன்" .
 அவ்வளவுதான்..

அதோ..கூப்பிடும் துரத்திலே 
டிசம்பர் 4
இதுவரை .....
நான் காணக்கிடைக்காத
நாட்காட்டியை தேடித் தேடிக்
கிழிக்கின்றேன்
பருவக் காற்றிலே
படபடக்கும் நாட்காட்டியின்
தாள்கள்.. நானும் அப்படித்தான் ..

நாட்கள் நகர நகர
இனம் புரியதொரு உணர்வு..
இந்த வருடம் மட்டும்
அக்டோபருக்குப் பின்
டிசம்பர் வராதா.. என்றொரு ஏக்கம்

இது வாழ்க்கையின்
இன்னொரு கட்டம்...
கனவாய் இருந்த காதல்..
கண்முன்னே நனவாகும் காலமிது

காதல் இங்கே வாழ்க்கையாய்...
காதலன் இங்கே கணவனாய்...

எத்தனையோ திருமணத்தில்
எங்கோயொரு மூலையில்
இருந்த எனக்கு .....
இங்கே திருமணம்
காதலாகிக் கசிந்துருகும் இரு
மனங்களின் திருமணம்
உணர்வுகளை பரிமாறிக்கொள்ள
துவளும்பொழுது தோள்சாய..ஒரு
துணைவரும் நாள் டிசம்பர் 4

இனிமேல் ..டாண்டம் யோசிக்கும்
நேரத்திலே..இரவு உணவு பற்றியும்
யோசித்தாக வேண்டும்.....
"மாவுமிச்சம் இருக்கு தோசை
ஊத்திக்கலமா?" --- நான்
"சண்டே மாயாஜால் போலாமா?
பாரதி" --- அவர்

ஒரு வளமான வாழ்க்கை
காத்திருக்கிறது எனக்காக
வாழ்ந்தாக வேண்டும்
காத்திருக்கிறேன் நானும்
காதலுடன்....." அவருக்காக "
                                                                      
               -----------> பொன்.ஞானப்பிரகாஷ்.   

கணிப்பொறியுகத்தில் நான் ---->*** காத்திருக்கிறேன் அவளுக்காக ****

கவிதை பிறந்த கதை:
************************
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இரண்டாம் கட்டம் என்று சொல்லப் படுவது வழக்கம்.
என்னைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் உள்ளங்கைக் கதகதப்பில் இருந்துவிட்டு உலக வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்கும் தருணமே திருமணப் பருவம். அப்படிப் பட்ட தருணத்திற்க்காக நான் காத்திருந்த
நேரத்திலெ எழுதிய கவிதை இது. என்னுடைய திருமண நாள் 03-Sep-2008.


*** காத்திருக்கிறேன் அவளுக்காக ****

இன்னும் ஓரிரு நாட்கள்...
இந்த துனையில்லாத..தனித்த
வாழ்க்கையின் முடிவுக்காலம்...

இஷ்டம் போல் வீடு திரும்பி..
முறையான
உணவு தவிர்த்து...உறக்கம் தவிர்த்து..
விடுமுறை நாளா...
நண்பகல் வரை தூங்கி...பின்
நானும் எழுந்து ...
நண்ப்ர்களை எழுப்பி..
குளித்துக் கிளம்பி..

"எங்க போறது?"
"தெரியலை...முதல்ல ரூமப்பூட்டு..
திருவான்மியூர் பஸ் ஸ்டாண்ட் போலாம்
அப்புறம் யோசிப்போம்"
பேருந்து வர.."மௌண்ட்ரோடு போலாம்"

பல படங்களின் கதை
பற்றி யோசித்து...அலசி ஆராய்ந்து..
பின் கதையில்லாத படம் பார்த்து
வெளியே வந்து புலம்பி
"நல்லவேளை..தியேட்டர்ல ஓரமா
இருட்டுல உட்கார்ந்தோம்..
இல்லைன்னா..விக்ரம் நம்மளையும்
சுட்டிருப்பான்..."
"சரி விடுங்க.. இனிமே தமிழ்ப்
படம் பாக்கிறதில்லை..இது
இந்த தியேட்டர் மேல சத்தியம்.."

"சரி..பீச் போலாம்"
கடலலையில்..கலையாத
வீடு கட்டி...
"எனக்கு பஜ்ஜி..
வினோத்க்கு ஸ்வீட்கார்ன்"

கணணித் துறையின் வளர்ச்சி
கலாச்சார சீரழிவு.....
விஞ்ஞானம் பற்றி வியந்து....
அரசியல் வியாதிகள்.. என
ஆவேசமாய்ப் பேசும்பொழுதே....
"அங்க பாருங்க.. அந்தப் பச்சை....
உங்களையே பார்க்கிறமாதிரி..."
உடனே நாடு மறந்து..வீடு மறந்து...
"எங்கடா"
உடனே "ஜொள்ளு விடுவீங்களே.."
சரி..டின்ன்ர் எங்கே?
"செட்டிநாடு ட்ரீட்".......

"சரி அப்புறம்"
"ட்ரைவ் இன் போலாம்"
"படத்துக்கே போக்கூடாதுன்னு..ஒரு
மானஸ்தன் சத்தியம் பணிணானே"

"அது அந்த தியேட்டர்மேல தான"

படம் முடித்து..
ஊரே உறங்கும் பொழுது....
நள்ளிரவு வீடு திரும்பி..
"தூக்கம் வராது.. பக்கத்து ரூம் ரோசன்கிட்ட
எதாவது சிடி இருந்தா வாங்கு...."

சுகமோ..துக்கமோ.. சமமாய்ப் பகிர்ந்து..
"இந்தாங்க டேப்லட்...
இட்லி சாப்ட்டு..அப்புறம்
சாப்பிடுங்க"

புகை பிடிக்காத..
மது..மாது..மாமிசம் உண்ணாத..
வரம்புமீறாத..வாழ்க்கை...

இது எல்லாமே...
இன்னும் ஓரிரு நாள்தான்...
பிறகு...
எனக்கே..எனக்கென்று அவள்..
அவளுக்காய் நான்..
எங்களுக்கென ஓர் உலகம்

அவள்:
"கொஞ்சம் உருளைக்கிழங்கு வேணுங்க..
ராத்திரி தோசை சுடலாங்க...
உமாப்பொண்ணு மயிலாப்பூரா?
இந்த சட்டையை துவைச்சிடலாமா...

நான்:
பீச்சுக்குப் போலாமாடி....
உங்க அம்மாக்கு போன் பண்ணியா?...
சண்டே சம்பத் வருவாண்டி லஞ்சுக்கு
தலைவலியா..தைலம் பூசவா...

அலுவலகப் பரபரப்பின் போது..
"என்னங்க சமைச்சிட்டிருந்தேன்..
கேஸ் காலியாயிடுச்சி"...
"எதுக்குடி காலைல வாந்தியெடுத்த.."

இது...
வாழ்க்கையின் அடுத்த கட்டம்..
மாற்றங்கள் ஒன்றே
மாறாதிருக்கும் இந்த வாழ்க்கையில்..
நம்முடைய ஈடுபாடும்..ரசனையுமே..
நம்மை உண்மையாய் வாழவைக்கும்...

இங்கே இழப்பதெற்கென்று
எதுவுமில்லை.....
கற்றுக்கொள்ளவும்..ரசிக்கவும்
நிறைய்ய்ய்ய்ய் இருக்கிறது...

ஆதலால்..
அவளுக்காக......
காத்திருக்கிறேன்...காதலுடன்..
இதோ தொட்டுவிடும் துரத்தில்
செப்டம்பர் 3..........

வாருங்கள் நண்பர்களே.........
வாழ்த்துவதற்க்கு..
வாழ்ந்துதான் பார்க்கலாம்.....

     என்றும் நட்புடன்
             ---------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கணிப்பொறியுகத்தில் நான் ---->**** அப்பா ****

கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தந்தையும்.

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தந்தையை நினைத்து எழுதியது.


 ======= அப்பா =========
நம்மில் எத்தனை பேருக்குத்
தெரியும்.. இந்தச்
சுமை தாங்கி பற்றி..

சுகமென்றலும் சோகமென்றாலும்
அன்னையின் தலைவருடலுக்கு
ஏங்கும் மனமே...இங்கே
எட்ட நின்றபடி
பாசத்தைப் பணமாய்
மாற்றிப் பொழிந்து கொண்டிருக்கும்
அந்த மனம் - "அப்பா"

கருவாக்கியது தாயென்றால்
உருவாக்கியது தந்தையல்லவா...

நஞ்சுக்கொடியை நான் துறந்து
பதினெழு மாதமாகியும்
நடவாதிருக்க..லாவகமாய் என்
விலாவில் துண்டைப் போட்டு
நடை பழக்கிக்கொடுத்தவர்..

எடுத்த் வாந்தியைப் பிடித்தவள்
அன்னை என்றால்...
பிடித்த கைஅலம்ப
நீரோடு நின்றவர்....

என் வைரஸ் காய்ச்சலுக்கு
மாரியம்மாளுக்கு மாவிளக்கு எடுப்பதாய்
என் அம்மா வேண்டிக்கொள்ள..
தினமும் மருத்துவனிடத்திலெ
மன்றாடி வீட்டிற்கே வரச்செய்து
வைத்தியம் பார்த்தவர்.......


இன்றெனக்கு டாடாவோ
போர்டோ எந்தக் காரனாலும்
வாங்க வசதியிருப்பினும்...
சிறுவயதில்..அவர் வாங்கிக் கொடுத்த
பச்சைக்கலரில் சிவப்பு விளக்குப்
பொருத்திய அந்த தகரக்காருக்கு
ஈடாகுமா..இவையெல்லாம்...

தீபாவளி நாளில்
கிடைத்த ஊதியத்தில்
எனக்குப் புதுத்துணிகள்....
குலாப்ஜாமூனும் ...குருவிவெடியும்...

அவருக்கு...
உடுத்தியிருந்த துணியை
துவைத்து..உலர்த்தி...
உடுத்துவார் ..மறுநாள்..என்னோடு..
"பாத்தியா?.. அப்பாக்கும் புதுச்சட்டை!"
விபரமறியாமல் சிரிப்பேன் நான்.

என் குடும்பத்தைப் பற்றிக்
கேட்போரிடமெல்லாம்..
பெருமையாய்ச் சொல்வேன்..இப்படி..
"அப்பா வாகன ஓட்டுநர்...
அம்மா வாழ்க்கையின் ஓட்டுநர்..."

ஆறாம் வகுப்பின்..
ஓவியப்போட்டியின்போதுதான்
வண்ணத்துப் பூச்சியை
துரிகையில் சிறைபிடிக்க
முடியாது நான் திணற..
மூன்றே நிமிடத்தில்..அவர்
முடித்ததைப் பார்த்து அதிர்ந்தேன்
நான்..
விட்டும் விடாத ஏக்கத்துடன்
சொன்னார் "நானும் அப்பல்லாம்
நல்லா வரைவேண்டா...."

வாழ்க்கைச்சக்கரத்தில் சிக்கி
தன் திறமை மறந்து...
காணமல் போனவர்கள்
பட்டியலில் அப்பா...

எந்த ஊர் சென்றாலும்
அந்த ஊரின் சிறப்போடு
வருவார்.......
"நேத்து தூத்துக்குடி போனேன்..
மொறுமொறுப்பான.ரஸ்க் இருக்கும்..
இன்னொமொரு நாள்...
கேரளா போனேன்..இந்தா சிப்ஸ்"

நாங்களிருவரும் சேர்ந்து..
வெளியெ சென்றுவிட்டு
வீடுதிரும்பும்போது கூட
உள்ளிருப்போரை அழைக்காமல்..
என் பெயரைச் சொல்லியெ
கதவைத் தட்டுவார்...
"பிரகாஷ் கதவத்தெறப்பா"..
புல்லரித்துப் போவேன் நான்..


சுகமோ...துக்கமோ..
பகிர்ந்துகொள்ள தாயைத்தேடிடும்..
மனமே.. சற்று உற்றுநோக்கினால் தெரியும்..
எட்டநின்று...ஏங்கிக்கொண்டிருக்கும்
மனம் தந்தையினுடையது

அதிகபட்சம் அப்பாவிடத்திலே
நம்முடைய சம்பாஷணை
இதாய்த்தானிருக்கும்
அப்பா:
"எத்தானாவது ரேங்க்?
கோடிவீட்டு கந்தசாமி பையன்
எப்பிடி படிக்கிறான்..நீயும் இருக்கியே..
செலவுக்குப் பணம் இருக்கா?
ரோட்டில பாத்துப்போனும்..
யமஹா வாங்காதே..."

நாம்:
ஏழாவது ரேங்க்...
அவனுக்கு கதையெல்லாம் எழுதத்
தெரியாது..நான் எவ்ளோ மெடல்......

நானூறு வேணும்..பிக்னிக்
போணும்...


கல்வி முடிந்து..ஊரைத்துறந்து...
பணிக்கமர்ந்ததும்...
"பார்த்து செலவு பண்ணுடா..."
"அப்பா தீவாளிக்கு உங்களுக்கு
சபாரி எடுத்திருக்கேன்"
"ஏண்டா காசைக் கரியாக்கிறே..
சபாரியெல்லாம் வேணாம்ப்பா.."
வெட்கத்துடன் சிரிப்பார்..

"சரி..நீங்க ஜ டெஸ்ட் போலயா?"
அப்பா:
"எதுக்குப்பா இந்த வயசிலெ...

ஆமா ஏதோ கண்ணாடி விக்கிதாம்
அதப்போட்டா கம்ப்யூட்ட்ர்ல ஒர்க்
பண்ணும்போது..பாதிக்காதாம்.."

இன்னும்..
நிறைய்ய்ய இருக்கிறது
அப்பாவைப் பற்றிச்சொல்ல..

ஆனால் நேரமில்லை..
ஒரு வார விடுப்பில்
ஊருக்குச் சென்று
அவர் மடியில் தலைசாய்த்து
நிறைய்யப் பேசவேண்டும்...
அம்மாவிடம் முன்பு பேசியதை...
அப்பா எட்டநின்று ஏக்கத்துடன்
கேட்டதை..அவர் தலைகலைத்து
நான் சொல்லியாகவேண்டும்...

ஆதலால்.. நண்பர்களே..
நீங்களும் என்போல் விடுப்பெடுத்துச்
செல்லுங்கள்..
நிறைய்ய்ய்ய்ய இருக்கிறது..
அப்பாவிடத்தில் பேச.................


         ---------> பொன்.ஞானப்பிரகாஷ்.

கணிப்பொறியுகத்தில் நான் ---->******** அம்மா *********

கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தாயும்.

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தாயை நினைத்து எழுதியது.


******** அம்மா *********
எந்த மொழிகளாலும்...
எல்லா மொழிகளிலும் உள்ள
அடைமொழிகளாலும் விளக்கிடமுடியாத
அன்பின் இலக்கணம்...


நான்...
பாதுகாப்பாக...சந்தோசமாக....
இருந்த காலம்...
அவள்.. கருவறைக்குள்
இருந்த காலம்.............


ஏழாயிரம் கொடுத்து வாங்கிய
மெத்தை தராது விட்ட
தூக்கத்தை....
என் தாயின் முழங்கைக்
கதகதப்பில் ...உணர்ந்தேன்.


ஆயிரம் கவலைகள் மனதிலிருந்தாலும்
அவள் கைவிரல்கள் என் தலைவருடும்
நேரத்தில் மறப்பேனே இவ்வுலகியல்புகளை
எடுப்பேனே மறுபிறவியொன்றை..


அவள்... பெரும்பாலும்
கோவிலுக்குச் சென்றதில்லை....
ஏனென்றால்... பதிலுக்கு..
சிறிதாய்ப் புன்னகைத்து..
"எங்கடா... நேரம்" என்பாள்.

அவளைப் பொறுத்தவரையில்...
எங்களைப் பேணிக்காப்பதே...
அவள் கடமை ......

நானும் போவதில்லை... ஏனெனில்
தெய்வத்துடன் இருக்கையில்..
பிற வழிபாடுகள்... தேவையில்லை...


பரிசுகள்...பாராட்டுக்கள்..ஏன்
மாநில விருது பெற்றூத்...
திரும்பும்பொழுது கூட..
பதக்கத்தை கையில் வைத்துக்
கொண்டு அவள் கேட்ட் முதல்
கேள்வி......
"சாப்பிட்டியா?"..........


வைரஸ் காய்ச்சலென
நான் படுத்துக்கொள்ள..
இரவு..பகல்.. பாராது..
விழித்திருந்து..நான்
எடுத்த வாந்தியை..
பிடித்தாளய்ய.. கையில்..

பாவி நான்..
தவறுதலாய்..அவள்
எச்சல் டம்ளரில்
காபி கொடுத்தாளென்று.. திட்டியதோ
கொஞ்சமல்ல..

மறந்தேன்.. ஒன்றை..
நானே அவள் எச்ச்ல்தானே.......
அவள் உதிரத்தின் மிச்சம்தானே நான்..


என்னைப் பிரசவிக்க..
நடந்த முயற்சியில்
நஞ்சுக்கொடி சுற்றிக்கொண்டு
சுவாசத்திற்க்கு நான் திணற..
தாயா...சேயா...என
மருத்துவன் கைவிரிக்க....
துணிந்து சொன்னாளாமே..

"குழந்தையைக் காப்பாற்றி
கணவரிடத்திலே கொடுங்களெ"ன்று...
அய்யோ! கடவுளே!...
என்ன தவம் செய்தேன்..
இவள் வயிற்றில் நான்..
பிறக்க........


கல்லுரிக் காலத்தில்
கட்டடித்துவிட்டுச் சென்ற
முதல் சினிமா..
உள்ளம் உறுத்தியதால்..
வீடு வந்ததும்.. நான்
உண்மை சொல்ல
ஆத்திரப்படாமல்.. இரவில்
அருகினில் துங்கும்பொழுது
அவள் சொன்ன..கதை..
அந்த.. திரைப்படத்தையும் மீறி
என்னை யோசிக்க வைத்தது...
விளைவு.. இன்றுவரை...
எதையும்.. மறைத்ததில்லை ...அவளிடத்தில்..


எந்த உடை உடுத்தினாலும்....
"ராசா மாதிரி இருக்கே" என்பாள்.
"எந்த ஊர் ராசா - பீட்டர் இங்லேண்ட்
போட்டிருக்கார்?" என்றால்..
"எனக்கு நீ ராசாதாண்டா" என்பாள்...


முதன்முறை பெங்களூர்
பயணித்த பதிமூன்றூ மணிநேரத்தில்..
பதினைந்து கைபேசி அழைப்புக்கள்..
"எங்கடா இருக்கே?.. சாப்பிட்டியா"...


எங்கள் வீட்டில்... பெண் குழந்தைகள்
இல்லை.. அதனால்..அம்மாவே
என் சகோதரியாய்... தோழியாய்..
என் குழந்தையாய்..குமரியாய்..


எதிர்வீட்டுச் சிறுவனுடன்
பக்கத்து பள்ளிமைதானத்தில்
விளையாட்டாய்... நான் இருக்க..
ஏதோ விபரீதமென்று பயந்தவள்... பின்
விபரமறிந்து..மைதானத்திற்கே வந்து
விளாசினாளே.. வீடுவரை...
"போவியா? சொல்லாம போவியா?
என்று...


அழுதுகொண்டெ அப்பாவிடம்..
குறைகூற..முதுகைத் தடவியவாறு..
சொன்னரே.. அப்பா...
"டேய்.. அம்மாடா... அவளுக்கு
பாசத்தைக் கூட கோவமாத்தாண்டா
காட்டத் தெரியும்... பாவம்டா"


ஆனாலும் சமாதானமாகாமல்...
சாப்பிடாது..நான் தூயில்கொள்ள
முயற்ச்சிக்க....
அருகே அமர்ந்து என்னை
அரவனைத்து...என் கண்ணீர்...
துடைத்தபடி...அவள் அழுதாளே..
"நீ காணமாப்போயிட்டியோன்னு..
அம்மா பயந்துட்டேண்டா....."


செல்லமாய்க் கோபித்தவாறே..
அப்பாவிடம் சொல்வாள்.....
"மாமியார்க் கொடுமையைக் கூட
அனுபவிச்சதில்லைங்க...இவன்
கொடுமை தாங்கலை..."


சரியான நேரத்தில்..
சரியான வயதில்..
சரியான விசயத்தைச் சொல்லிக்கொடுத்த
பல்கலைக் கழகம் அவள்...
"பக்கத்து வீட்டு விஜி
பெரிய மனுசி ஆயிட்டாடா"
"இல்லம்மா..அவ என்னைவிட
உயரம் கம்மி..அப்புறம் ஏன்
பெரிய மனுசின்னு சொல்றே??"
அப்பாவியாய் நான்...
"இல்லடா..அப்பிடின்னா...."


உலக விசயங்களையும்..
தன் அனுபவங்களையும்..
சமமாய்ப் பகிர்ந்தளித்தாள்.

"உனக்கு ஒரு நல்ல பொண்ணா
பார்க்கணுண்டா...
நம்ம ரேகாவையே கல்யாணம்
பண்ணிக்கிறியா? - என்னை மாதிரியே
உன்னை பத்திரமா பாத்துப்பா.."


நானும் பிள்ளையாரைப் போல்தான்..
அவனோ பெற்றார்களைச் சுற்றி வந்து
பழம் மட்டும் பெற்றான்..
நான் என் அன்னையைப் போல்
குண்ம்கொண்ட ரேகாவைப் பெற்றேன் - மனைவியாய்!

இன்னும்
எவ்வளவோ இருக்கிறது...
என்னம்மாவைப் பற்றிச் சொல்ல...
எதைச் சொல்ல்..
எதை விட....
எனக்குள்ளே குழப்பம்..
எனக்குள்ளே கூச்சம்...
எனக்குள்ளே மகிழ்ச்சி..
எனக்குள்ளே நெகிழ்ச்சி..
எனக்குள்ளே அன்பு...
எனக்குள்ளே பாசம்....
எனக்குள்ளே அம்மா .!!!!!.........

         --------> பொன்.ஞானப்பிரகாஷ்