About Me

My photo
என் தமிழ்த் தோழர்களுக்கு வணக்கம்!. நான் எப்பொழுதுமே..என்னை ஒரு எழுத்தாளன் என்று கூறிக்கொள்வதில்லை.. சகமனிதர்களை..நேசிக்கிறேன்.அவர்களுடைய..சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வப்பொழுது என்னைப் பாதிக்கின்ற.. சம்பவங்களைப்..பதிவு செய்கிறேன். இதுவரையில்..காகிதம்.. மின்னஞ்சல் மூலமாய்.. பகிர்ந்துகொண்டிருந்த நான்..இப்பொழுது..இன்ணையதளம் மூலமாக..உங்களின் முன்.. இது என் பெருமை பாட தொடங்கப்பட்டதல்ல... கருத்துப் பரிமாற்றத்திற்க்கான ஒரு புதிய முயற்சி... வாருங்கள் தோழர்களே..வாழ்த்துவதற்க்கு..வாழ்ந்த்துதான் பார்க்கலாம்!.. அன்புடன் பொன்.ஞானப்பிரகாஷ்.

Saturday, October 29, 2011

கணிப்பொறியுகத்தில் நான் ---->**** அப்பா ****

கவிதை பிறந்த கதை:
************************
சில உணர்வுகளும்..உறவுகளும்..நாம் உருவான காலத்திலிருந்தே
நம்முடன் இருந்தாலும் நமக்குப் புரிவதில்லை. அது போல்தான் நம் தந்தையும்.

பொருளீட்டும் பொருட்டு என்னையே நான் அடகு வைத்துக்கொண்டு..ஒரு
கணிப்பொறியாளனாய்..வாழ்ந்து வந்த காலத்தில்..என் தந்தையை நினைத்து எழுதியது.


 ======= அப்பா =========
நம்மில் எத்தனை பேருக்குத்
தெரியும்.. இந்தச்
சுமை தாங்கி பற்றி..

சுகமென்றலும் சோகமென்றாலும்
அன்னையின் தலைவருடலுக்கு
ஏங்கும் மனமே...இங்கே
எட்ட நின்றபடி
பாசத்தைப் பணமாய்
மாற்றிப் பொழிந்து கொண்டிருக்கும்
அந்த மனம் - "அப்பா"

கருவாக்கியது தாயென்றால்
உருவாக்கியது தந்தையல்லவா...

நஞ்சுக்கொடியை நான் துறந்து
பதினெழு மாதமாகியும்
நடவாதிருக்க..லாவகமாய் என்
விலாவில் துண்டைப் போட்டு
நடை பழக்கிக்கொடுத்தவர்..

எடுத்த் வாந்தியைப் பிடித்தவள்
அன்னை என்றால்...
பிடித்த கைஅலம்ப
நீரோடு நின்றவர்....

என் வைரஸ் காய்ச்சலுக்கு
மாரியம்மாளுக்கு மாவிளக்கு எடுப்பதாய்
என் அம்மா வேண்டிக்கொள்ள..
தினமும் மருத்துவனிடத்திலெ
மன்றாடி வீட்டிற்கே வரச்செய்து
வைத்தியம் பார்த்தவர்.......


இன்றெனக்கு டாடாவோ
போர்டோ எந்தக் காரனாலும்
வாங்க வசதியிருப்பினும்...
சிறுவயதில்..அவர் வாங்கிக் கொடுத்த
பச்சைக்கலரில் சிவப்பு விளக்குப்
பொருத்திய அந்த தகரக்காருக்கு
ஈடாகுமா..இவையெல்லாம்...

தீபாவளி நாளில்
கிடைத்த ஊதியத்தில்
எனக்குப் புதுத்துணிகள்....
குலாப்ஜாமூனும் ...குருவிவெடியும்...

அவருக்கு...
உடுத்தியிருந்த துணியை
துவைத்து..உலர்த்தி...
உடுத்துவார் ..மறுநாள்..என்னோடு..
"பாத்தியா?.. அப்பாக்கும் புதுச்சட்டை!"
விபரமறியாமல் சிரிப்பேன் நான்.

என் குடும்பத்தைப் பற்றிக்
கேட்போரிடமெல்லாம்..
பெருமையாய்ச் சொல்வேன்..இப்படி..
"அப்பா வாகன ஓட்டுநர்...
அம்மா வாழ்க்கையின் ஓட்டுநர்..."

ஆறாம் வகுப்பின்..
ஓவியப்போட்டியின்போதுதான்
வண்ணத்துப் பூச்சியை
துரிகையில் சிறைபிடிக்க
முடியாது நான் திணற..
மூன்றே நிமிடத்தில்..அவர்
முடித்ததைப் பார்த்து அதிர்ந்தேன்
நான்..
விட்டும் விடாத ஏக்கத்துடன்
சொன்னார் "நானும் அப்பல்லாம்
நல்லா வரைவேண்டா...."

வாழ்க்கைச்சக்கரத்தில் சிக்கி
தன் திறமை மறந்து...
காணமல் போனவர்கள்
பட்டியலில் அப்பா...

எந்த ஊர் சென்றாலும்
அந்த ஊரின் சிறப்போடு
வருவார்.......
"நேத்து தூத்துக்குடி போனேன்..
மொறுமொறுப்பான.ரஸ்க் இருக்கும்..
இன்னொமொரு நாள்...
கேரளா போனேன்..இந்தா சிப்ஸ்"

நாங்களிருவரும் சேர்ந்து..
வெளியெ சென்றுவிட்டு
வீடுதிரும்பும்போது கூட
உள்ளிருப்போரை அழைக்காமல்..
என் பெயரைச் சொல்லியெ
கதவைத் தட்டுவார்...
"பிரகாஷ் கதவத்தெறப்பா"..
புல்லரித்துப் போவேன் நான்..


சுகமோ...துக்கமோ..
பகிர்ந்துகொள்ள தாயைத்தேடிடும்..
மனமே.. சற்று உற்றுநோக்கினால் தெரியும்..
எட்டநின்று...ஏங்கிக்கொண்டிருக்கும்
மனம் தந்தையினுடையது

அதிகபட்சம் அப்பாவிடத்திலே
நம்முடைய சம்பாஷணை
இதாய்த்தானிருக்கும்
அப்பா:
"எத்தானாவது ரேங்க்?
கோடிவீட்டு கந்தசாமி பையன்
எப்பிடி படிக்கிறான்..நீயும் இருக்கியே..
செலவுக்குப் பணம் இருக்கா?
ரோட்டில பாத்துப்போனும்..
யமஹா வாங்காதே..."

நாம்:
ஏழாவது ரேங்க்...
அவனுக்கு கதையெல்லாம் எழுதத்
தெரியாது..நான் எவ்ளோ மெடல்......

நானூறு வேணும்..பிக்னிக்
போணும்...


கல்வி முடிந்து..ஊரைத்துறந்து...
பணிக்கமர்ந்ததும்...
"பார்த்து செலவு பண்ணுடா..."
"அப்பா தீவாளிக்கு உங்களுக்கு
சபாரி எடுத்திருக்கேன்"
"ஏண்டா காசைக் கரியாக்கிறே..
சபாரியெல்லாம் வேணாம்ப்பா.."
வெட்கத்துடன் சிரிப்பார்..

"சரி..நீங்க ஜ டெஸ்ட் போலயா?"
அப்பா:
"எதுக்குப்பா இந்த வயசிலெ...

ஆமா ஏதோ கண்ணாடி விக்கிதாம்
அதப்போட்டா கம்ப்யூட்ட்ர்ல ஒர்க்
பண்ணும்போது..பாதிக்காதாம்.."

இன்னும்..
நிறைய்ய்ய இருக்கிறது
அப்பாவைப் பற்றிச்சொல்ல..

ஆனால் நேரமில்லை..
ஒரு வார விடுப்பில்
ஊருக்குச் சென்று
அவர் மடியில் தலைசாய்த்து
நிறைய்யப் பேசவேண்டும்...
அம்மாவிடம் முன்பு பேசியதை...
அப்பா எட்டநின்று ஏக்கத்துடன்
கேட்டதை..அவர் தலைகலைத்து
நான் சொல்லியாகவேண்டும்...

ஆதலால்.. நண்பர்களே..
நீங்களும் என்போல் விடுப்பெடுத்துச்
செல்லுங்கள்..
நிறைய்ய்ய்ய்ய இருக்கிறது..
அப்பாவிடத்தில் பேச.................


         ---------> பொன்.ஞானப்பிரகாஷ்.

No comments:

Post a Comment